தமிழ் ஓர் மொழியாய், மக்களாய் இப்புவியில் தோன்றி, நாகரீகங்கள் படைத்து, உலகெல்லாம் படர்ந்து, மொழியின் ஊடாக வீரம், கொடை, பண்பு வளர்த்து, கற்காலத்தில் இருந்து கணினி காலம் வரை அதே செருக்குடன் இன்றும் நம் கண்முன்னே ஓங்கி வளர்ந்த பெரும் விருட்சமாய் கிடக்கிறது.
ஐவகை நிலங்களில் வாழ்வியல் கற்றுத் தந்து, உலகப்பொதுமறை அளித்து, அறம் மட்டுமே என்றும் அழியாப் பெருஞ்செல்வம் என அறிவூட்டிய நம் தாய் தமிழ், அது அளித்த வேந்தர்கள், அறிஞர்கள் அவர்தம் படைத்த நூல்கள் ஆயிரமாயிரம்.
அறமும், அறிவும் மட்டுமே இத்தமிழ் வளர அச்சாணிகள். அவற்றை காலத்திற்கேற்ப பாதுகாத்து வந்ததே, இக்காலச் சுழற்சியில் அது எத்தடையும் இன்றி, உருண்டோடி, இத்தனை தூரம் கடந்து வந்திருக்க ஒரே காரணம். ஆகவே இவ்விரண்டையும் மூலமாக கொண்டு இந்நவநாகரீகத்தில் வளரவிருக்கும் அடுத்த தலைமுறைக்கு தமிழ் சொல்லும் வாழ்வியலை, வரலாற்றை, அதன் தொன்மையை எடுத்து சொல்ல ஓர் முயற்சி.