அன்பிற் கனிந்த தமிழுள்ளங்களுக்கு வணக்கம்.
தமிழ்த்தடம் அறக்கட்டளை சார்பாக நற்சித்திரம் எனும் பெயரமைந்த கலை இலக்கிய பண்பாட்டிதழ், திங்களிதழாகத் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. நமக்கென்று ஒரு படைப்புலகத்தை உருவாக்குவதற்குக் காலம் வழங்கிய நல்வாய்ப்பிற்காக, இந்த ஆசிரியர் குழு எல்லையற்ற பெருமை கொள்கிறது.
மனிதகுலம் சொற்களின் வழியாகவே பெரும்பாலும் தனது அறிவையும் அனுபவத்தையும் ஞானத்தையும் உணர்வையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல சேகரித்து வைத்துள்ளது. சொல் என்பது தன்னளவில் ஒளியேற்றிய ஒரு சுடர். அது காலம் தோறும் புதுப்புது பொருளாக ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த ஒளியில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஒருங்கே தரிசிக்கிறோம்.