Thamizhthadam

ஐந்திணை காப்போம்...

கொடிவழி தேடி…

சங்ககாலத் தமிழர்கள் தங்கள் நாகரிகமான அன்புடைவாழ்வை அன்பின் ஐந்திணை என்றனர்…

தங்கள் வாழ்வின் இயல்பை நில அமைப்பைப் பொறுத்தே அமைத்துக்கொண்டனர்.

குறிஞ்சி – முல்லை – மருதம் – நெய்தல்- பாலை இந்த ஐந்து நிலவகை வாழ்க்கை முறைக்கும் பூக்கள் பெயரை சூட்டி இயற்கையப் போற்றி அகவாழ்வை அமைத்துக்கொண்டனர்.

நாட்டைக் காக்கும் நற்போர்வாழ்வியலான புறப்பொருள் வாழ்விலும் போர்செய்யும் வீரர்கள் தாங்கள் சூடியிருக்கும் பூவை வைத்தே போர் முறையை அறிவித்து அணிவகுத்தனர்.

இன்ன நோக்கத்திற்காக போரிட வந்தார்கள் என்று எதிரிக்கு உணர்த்த போர் உத்தியாக பூக்களையே பயன்படுத்தினார்கள்.

காலத்தை கணக்கிட நம் முன்னோர்கள் பெரும்பொழுது – சிறுபொழுது என இரண்டாகப் பிரித்தனர்.

பூ மலரும் பொழுதுகளையே அந்நிலத்திற்கான சிறுபொழுதாக அடையாளப்படுத்தினர்.

இந்தப் பெயர்களை ஏனோதானோ என்று வைத்துவிடவில்லை!

முல்லைப் பூ மாலையில் பூக்கும்! நெய்தல் பூ எற்பாட்டில் பூக்கும் (எல் – சூரியன், பாடு – மறையும் நேரம்)! தாமரைப் பூ வைகறையில் (அதிகாலை) பூக்கும்! குறிஞ்சிப் பூ யாமத்தில் (நல்லிரவு) பூக்கும்! பாலைப் பூ (கள்ளிப் பூ) நண்பகலில் பூக்கும்.

இப்படி இயற்கையோடு இயைந்து அகவாழ்வும் புறவாழ்வும் செம்மார்ந்த வாழ்வாக வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்.

அவர்களின் தொன்மையை நாளும் தேடுவோம்! உலகிற்கு அறிவிப்போம்!.