ஈ, தா, கொடு என்ற மூன்றுசொற்களுக்குக் கூட தொல்காப்பியம் இலக்கணம் சொன்னது!
ஈ-என்பது தாழ்ந்தவன் உயர்ந்தாரைப் பார்த்துக் கேட்பது. ஈதல் வேண்டும் (யாசகம் வேண்டும்) என்பதைக் குறிக்கும்.
தா-என்பது தா என்று கேட்பவரும் கொடுப்பவரும் சம நிலை உள்ளவர்களால் பேசப்படும் சொல்.
கொடு-என்பது உயர்ந்தவர் தாழ்ந்தவரிடம் உள்ள பொருளை அதிகாரமாய் கேட்பது
இழக்க ஏதுமில்லை என்று கையறு நிலையாய் நிற்கும் வாய்ப்பு அற்றவர்கள் துயரங்களில் பங்கெடுப்போம்!
ஈ என்ற ஒற்றைச் சொல்லால் ஏங்கி நிற்போரை கைத்தூக்கிவிட நம்மால் ஆனதை அறக்கொடை மூலம் ஆவன செய்வோம்!
ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்!
பிறருக்கு கொடுத்து உதவி அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அறியாதவர்களை எண்ணி வருந்துகிறார் ஐயன் வள்ளுவர். செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிதாம்
.எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவிக்கு இந்த உலகையும் வானையும் கொடுத்தாலும் ஈடாகாது என்ற ஐயன் வள்ளுவரின் வழி நடப்போம்!
உண்டிக் கொடுத்தோரே உயிர்கொடுத்தோர் என பசிப்பிணிப் போக்கியது மணிமேகலைக் காப்பியம்!
எல்லா நிலையிலும் ஒல்லும் வகையால் திறம்பட முயன்று பிறர் துன்பம் துடைப்போம்! நம்மால் இயன்றதை கொடுப்போம்! என்றும் மக்களுக்கு ஆதரவாய் நாம் இருப்போம்!